தமிழ் தர்ஜுமா 5

அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.
தூர் (மலை) மீது சத்தியமாக!
ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
விரித்து வைக்கப்பட்ட,
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,
இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
"இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
"நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்."
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
(அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்."
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர், ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
"இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
"ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
"நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்."
எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.
அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா?
"நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறும்.
அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரயீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
(அவருடைய) பார்வை விலகவுமில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை, நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள், எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை, அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.
ஆகவே, எவன் நம்மை தியானிப்தை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.
ஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான், நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான், நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன், அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
(நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?
அவன் ஒரு சிறிதே கொடுத்தான், பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அவன் பார்க்கிறானா?
அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்றாஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
(அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்,
இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.
பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.
மேலும் உம் இறைவனில் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.
அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான், அழச் செய்கிறான்.
இன்னும் நிச்சயமாக அவனே மரிக்கச் செய்கிறான், இன்னும் உயிர்ப்பிக்கிறான்.
இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.
நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.
நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.
'ஸமூது' (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.
எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.
நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.
(அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.
இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?
அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.
(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.
எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்" என்றும் கூறுகிறார்கள்.
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்;
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.
அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், "இது மிகவும் கஷ்டமான நாள்" என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார்.
அப்போது அவர், "நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.
அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.
எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.
நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
'ஆது' (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?)
நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.
ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
நிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.
"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).
"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.
ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.
என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?)
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.
நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.
திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்.
அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். "என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்).
எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.
"ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறினோம்).
நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.
ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.
(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா?
அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா?
அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும்.
நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.
அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்).
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்
உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.
அளவற்ற அருளாளன்,
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
அவனே மனிதனைப் படைத்தான்.
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்).
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
இன்னும், நீண்ட நிழலிலும்,
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
அப்பெண்களைக் கன்னிகளாகவும்,
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)
(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்.
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே, பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.
அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான், இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.
நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்கிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.
உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).
அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன்.
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) "இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்" (என்று கூறப்படும்).
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: "எங்களை கவனியுங்கள், உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்" என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும், "உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்." பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?" என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள், "மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள், (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்" என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.
"ஆகவே, இன்னும் உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது, உங்களுடைய தங்குமிடம் நரகம் தான், அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்" (என்றுங் கூறப்படும்).
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்: நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்.
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள், அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) போரொளியும் உண்டு, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்தான்.
அறிந்து கொள்ளுங்கள்: "நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது, ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள், அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்.
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான், அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபை உடையவன்.
அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்) அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது, தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.
நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
"உங்களில் சிலர் தம் மனைவியரைத் "தாய்கள்" எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்" (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.
மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும், அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப் பட்டதைப் போல் இழிவாக்கப்ப படுவார்கள் - திடமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
அல்லாஹ் அவர்கள் அனைவரையும்உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.
இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறிவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் "நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை" என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும், அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள், ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம், ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது, எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.
ஈமான் கொண்டவர்களே! சபைகளில் "நகர்ந்து இடங்கொடுங்கள்" என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, 'எழுந்திருங்கள்" என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள், அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றீராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான், ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள், இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள், மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர், அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.
அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது, அவர்கள் நரகவாதிகள், அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள், அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள், அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!
நிச்சமயாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.
"நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்.
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே, எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை, அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான், அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர் எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான், இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
அதற்கு(க் காரணம்); நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள், அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காவுமே தான்.
மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை, எனினும், நிச்சியமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும், மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது) மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு, அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள், அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர், அன்றியும் அ(வ்வாறு குடியேறிய)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள், மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் "நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம், அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்" என்று கூறுகின்றனர், ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள், மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள், அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறுமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.
நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது, (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!
கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள், அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை, (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்; மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்குரிய பலனை அனுபவித்தனர், அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது, (அவன்) மனிதனை நோக்கி, "நீ (இறைவனை) நிராகரித்து விடு" என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் "நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன், (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என்றான்.
அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.
ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள், ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான், அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள், சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள், நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள், என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்; கள், அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள், ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.
உங்கள் உறவினரும், உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், "உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன" என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, "அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); "எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,"
"எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்" (என்றும் வேண்டினார்).
உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது, ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோ, (அது அவருக்கு இழப்புதான், ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.
உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும், மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்.
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
மேலும் உங்கள் மனைவியரிலிருந்து எவரேனும் உங்களைவிட்டுத் தப்பி, காஃபிர்களிடம் சென்ற பின்னர், நீங்கள் போர்ப்பொருள்களை அடைந்தால், எவர்கள் மனைவியர் சென்று விட்டனரோ, அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதை நீங்கள் கொடுங்கள், அன்றியும், நீங்கள் எவன் மீது நம்பிக்கை கொண்டு முஃமின்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும், அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக, மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் சொள்ளாதீர்கள், ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன அவன் யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்; "என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே ஆவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.
மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
(அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களா இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான், சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு, (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும், எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.
அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான், மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும், எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்."
ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
"நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்" (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
"(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, "நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்" என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்" என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், "நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்" என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்" என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர், நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும், ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது, எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர், சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள், இவர்கள்தாம் (உம்) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான், இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
இன்னும், "வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும், அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள், (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்" என்று கூறியவர்கள், வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை, ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்" என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.
(மானிடர்களே!) அவனே உங்களைப் படைத்தவன், உங்களில் காஃபிரும் உண்டு, முஃமினும் உண்டு - இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கிவாறே இருக்கின்றான்.
வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான், அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான், நீங்கள் இரசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்.
இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர், அவர்கள் தங்கள் (தீய) காரியத்தின் பலனை அனுபவித்தனர் - அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர், ஆனால் அப்போது அவர்களோ, (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?" என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள், அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன், அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.
(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; "அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம்இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும், ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே, அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும் கெட்ட சேருமிடமாகும்.
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் வழிபடுங்கள், இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை, மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான், அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன், சகிப்பவன்.
மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது, இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள், அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் - இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்.
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் ('இத்தா'விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள், அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள், ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும், ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும், எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான், கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.
எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர், ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.
இவ்வாறு அவை தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டன, அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று.
அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான், ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார், ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக, மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள், அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.
நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான், மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான், அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது "உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?" என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர் "(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) என்குத் தெரிவித்தான்" என்று (பதில்) கூறினார்.
நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான், அன்றியும்) ஜிப்ரயீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.
அவர் உங்களை 'தலாக்' சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
(அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகழும் கூறாதீர்கள், நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான்.
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டு, அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.
நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான,; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனiவிகளாகவே இருந்தனர், எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர், எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை, இன்னும், "நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்" என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார், நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.
இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.
அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது, அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், "அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?" என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
அதற்கவர்கள் கூறுவார்கள்; "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை, நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை" என்று சொன்னோம்."
இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்."
(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.
மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.
(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்; றையும் நன்கு தெறிந்தவன்.
அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர், என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுகிபவன்.
அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.
அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.
(நபியே!) நீர் கூறுவீராக: "அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்."
"அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான், அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்" என்று கூறுவீராக.
ஆயினும், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?" என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.
"இதைப் பற்றி ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது, தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்" என்று (நபியே!) நீர் கூறும்.
எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும், இன்னும், "நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்" என்று அவர்களுக்குக் கூறப்படும்.
கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
(நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான், அவன் மீதே நாங்கள் ஈமாக் கொண்டோம், மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!"
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.
கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.
பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்
நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான்.
விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்; டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை,
எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
"நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்" (என்று கூறிக் கொண்டனர்).
எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்,
"எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது" (என்று).
உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: "நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்" என்று கூறினார்கள்.
(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) "இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்" (என்றும் கூறிக்கொண்டனர்.)
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார்.
"எங்கள் இறைவன் தூயவன், நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்" என்றும் கூறினர்.
பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோகினர்.
அவர்கள் கூறினார்கள்: "எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
"எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்" (எனக் கூறினர்).
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது, அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
(சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,
அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
(அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர்.
ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.
நிச்சயமானது.
நிச்சயமானது எது?
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.
"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்."
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.
"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்).
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
"அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
"(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
"என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).
"(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்."
"பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
"பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).
"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்."
"அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை."
"எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை."
"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை."
"குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்."
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-
தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
தொழுகையாளிகளைத் தவிர-
(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).
அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.
இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.
அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.
இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?
அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.
எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.
ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; "நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக" என (ரஸூலாக) அனுப்பினோம்.
"என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்று கூறினார்.
"அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.
"(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்" (என்றும் கூறினார்).
பின்னர் அவர், "என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
"ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.
"அன்றியும்; நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர், மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
"பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.
"அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்.
"(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
"அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.
"உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.
"நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.
"ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
"இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
"அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
"பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.
"அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
"அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்" (என்றும் போதித்தார்).
நூஹ் கூறினார்: "என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர், அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
"மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்."
மேலும் அவர்கள்; "உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்றும் சொல்கின்றனர்.
"நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர், ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே."
ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
"நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
"என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும் கூறினார்).
நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
"அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்" (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
"மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
"ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் "மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்" என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
"ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
"இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.
"நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.
"(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.
"அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
"மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.
"அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
"இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்." எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
"இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
"அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்" (என்று அந்த ஜின் கூறிற்று).
"(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
"அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக, ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.
"அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
"மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்."
(நபியே!) நீர் கூறும்; "நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்."
கூறுவீராக, "நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்."
கூறுவீராக, "நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.
"அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர்" என (நபியே!) நீர் கூறும்.
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும், எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
(நபியே!) நீர் கூறும், "உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.
"(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
"தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.
"தங்களுடைய இறைவனின் தூதுத்துவச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்."
போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக,
அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.
நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.
எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.
என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
நிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.
அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும்.
நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.
எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான் எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
அதில் வானம் பிளந்து விடும் அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.
நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபபதேசமாகும் ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான், அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான், ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள், நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.
(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.
இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-
அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.
அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).
இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.
பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.
நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.
அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.
பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான்.
அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.
அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
"இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)
அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.
"ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?
அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது.
(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.
அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; "அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-
உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).
ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
குற்றவாளிகளைக் குறித்து-
"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)
அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.
"(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
"இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-
(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).
ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.
அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
ஆகவே, பார்வையும் மழுங்கி-
சந்திரன் ஒளியும் மங்கி-
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.
"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,
"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.
காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும்,
(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
"உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை" (என்று அவர்கள் கூறுவர்).
"எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்" (என்றும் கூறுவர்).
எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.
மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.
மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.
(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.
மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.
'ஸல்ஸபீல்' என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.
இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.
அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர், அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
"நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று" (என்று அவர்களிடம் கூறப்படும்).
நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக, அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.
இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
எனவே, எவன் வரம்பை மீறினானோ -
இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
அடர்ந்த தோட்டங்களையும்,
பழங்களையும், தீவனங்களையும்-
(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
மலைகள் பெயர்க்கப்படும் போது-
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
வானம் அகற்றப்படும் போது-
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
வானம் பிளந்து விடும்போது
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
கப்றுகள் திறக்கப்படும் போது,
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
மகத்தான ஒரு நாளுக்காக,
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது.
"இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள்.
(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
வானம் பிளந்துவிடும் போது
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
அவன் நரகத்தில் புகுவான்.
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
விடியற் காலையின் மீது சத்தியமாக,
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
உறவினனான ஓர் அநாதைக்கோ,
அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.
முற்பகல் மீது சத்தியமாக
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
யாசிப்போரை விரட்டாதீர்.
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.
(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).
அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.
"அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்."
நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள்.
அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
காலத்தின் மீது சத்தியமாக.
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-
இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
(அவனே) மனிதர்களின் அரசன்;
(அவனே) மனிதர்களின் நாயன்.
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.


(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

0 comments: