தமிழ் தர்ஜுமா
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
அலிஃப், லாம், மீ; ம்.
இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
இன்னும் மனிதர்களில் "நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
"பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள்.
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள்.
அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர்.
இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.
அம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம்.
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்.
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.
இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.
"ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான்.
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.
இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.
பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
(பின்பு, நாம் சொன்னோம்; "நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."
அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.
இஸ்ராயீலின் சந்ததியனரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், "திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்;.
இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.
இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்) அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு சோதனை இருந்தது.
மேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
மூஸா தம் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்" எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் "மன்னு, ஸல்வா" (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, "நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்" (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை, மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, "உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; "அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).
அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.
இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.
"அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!" என்றார்கள். "அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக" (மூஸா) கூறினார்.
"அதன் நிறம் யாது!" என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; "திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்" என்று மூஸா கூறினார்.
"உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
அவர்(மூஸா)"நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். "இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்" என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
"நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).
"(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.
(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, "நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள்; ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, "உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர்.
அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?
மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!
"ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?" என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.
அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.
எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
இன்னும் (நினைவு கூறுங்கள்;) "உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்" என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள்; (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.
(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களிமீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
மறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமாள) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். உங்கள் மனம் விரும்பாததை(நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
இன்னும், அவர்கள் (யூதர்கள்) "எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.
"அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. "நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.
நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.
(நபியே!) "இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீர் சொல்வீராக.
ஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.
அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.
மேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா? ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்;. இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) 'ராயினா' என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) 'உன்ளுர்னா' என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
அஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்;. அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை 'குஃப்ரினால்' மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
"யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; "நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்.
இன்னும் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
இன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; "அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை?" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உறுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.
(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்;. நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்;. இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; "என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
(இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.
(இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; "இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக" என்று கூறினார்;. அதற்கு இறைவன் கூறினான்; "(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்" பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே."
இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறினர்).
"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."
"எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்."
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
இன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; "(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்" என்று சொன்னபோது அவர், "அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்" என்று கூறினார்.
இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்."
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர்.
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
"நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
(முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.
"(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறோம்" (எனக் கூறுவீர்களாக).
அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்" என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.
"இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே" என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக "(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை."
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; "(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?" என்று. (நபியே!) நீர் கூறும்; "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்" என்று.
இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;, யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்;, யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்;. ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.
ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.
ஆகவே(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).
இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.
நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.
அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.
மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).
(இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.
(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்; "நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்." இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான். அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்;. அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்;. அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.
எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது?
இதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை)சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்; நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; "அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.
(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது "மஷ்அருள் ஹராம்" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல் - இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், "எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு" என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.
இன்னும் அவர்களில் சிலர், "ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
இவ்வாறு, (இம்மை - மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது). அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.
அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்;. கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
"அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்" என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,
தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்;, பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும்.
(நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்; "நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்" என்று. அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.
நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்; டுள்ளது. இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்;. இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.
(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்."
போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
(நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."
நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான்.
(மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) "அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;" நீர் கூறுவீராக "அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது. நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்;. இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்;. அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்."
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர் கூறும்; "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்;. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.
மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.
(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தத்-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்;. ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்;. அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்;. இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்;. எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;. அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தி; த்துப்பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்;. அல்லாஹ்வை அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;. எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்;. (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
(இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்;. இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்;. அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.
தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.
ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.
மேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.
நீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகின்றான்.
(நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் "இறந்து விடுங்கள்" என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்; "நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்" என்று கூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார்; அதற்கவர்கள்; "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள்;. எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்.
இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், "நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது" என்று கூறினார்.
பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர்; "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்;. பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள்.
மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்;. தாவூது ஜாலூத்தைக் கொன்றார்;. அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்;. தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்;. நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்;. இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன. (இதைப் பார்த்த அவர்) "இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?" என்று (வியந்து) கூறினார்;. ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, "எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்" என்று கூறினார்; "இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்" எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர், "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்" என்று கூறினார்.
இன்னும், இப்ராஹீம்; "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா?" எனக் கேட்டான்; "மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)" என்று கூறினார்; "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்;. பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான்.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்.
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்;. அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;. ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
தான தர்மங்களை நீங்கள் வெளிப்டையாகச் செய்தால் அதுவும் நல்; லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்க இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.
தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்;. அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்;. பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர, அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"
அலிஃப், லாம், மீம்.
அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்" (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
(இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: "வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள். அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்"
(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்;. இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்;. நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்; ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
(நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
இத்தகையோர் (தம் இறைவனிடம்)
(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹவுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; "நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று கேளும்;. அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
"நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு" என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன. இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
இதற்குக் காரணம்; எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான.; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து, ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
(நபியே!) நீர் கூறுவீராக
(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்."
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
(நபியே! இன்னும்) நீர் கூறும்; "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
இம்ரானின் மனைவி; "என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறியதையும்.
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப் போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
அவர் கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான்.
"என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று கூறினான்.
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்).
"மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக" (என்றும்) கூறினர்.
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.
"மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."
(அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).
"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்."
"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்."
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்.
"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
(நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்;, ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
(நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்;. எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும்.
நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.
அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
(நபியே! அவர்களிடம்) "வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; "நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீனாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
நிச்சயமாக மனிதர்களி; ல் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்;. மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.
வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்); "ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்;. இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்" என்று கூறுகின்றனர்.
"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;. உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.
அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்;. இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்;. அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்;. அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், 'பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை' என்று அவர்கள் கூறுவதுதான்;. மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.
அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்;. இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்;. மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல "அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்).
மேலும் அவர், "மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்.
எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.
எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டுவந்து அதை ஓதிக்காண்பியுங்கள்" என்று.
இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்;. அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை."
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி; றான்.
"வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
"வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்).
எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
(நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்;. மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை. எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது). அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்;. ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்;. அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்;. இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை) மீறி நடந்து கொண்டும் இருந்தது தான் (காரணமாகும்).
(ஏனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்;. நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள். தீமையை விட்டும் விலக்குகிறார்கள்;. மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்;. இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள்.
இவர்கள் செய்யும் எந்த நன்மையம் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது. அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.
நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்;. அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை. அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).
(முஃமின்களே!) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது "நாங்களும் நம்புகிறோம்" என்று கூறுகிறார்கள்;. எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்".
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
(நபியே! நினைவு கூர்வீராக) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்;. அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்;. ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
"பத்று" போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்;. ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்; "உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று.
ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.
உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை. அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை. அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்;. அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்;. இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்;. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்;. அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்;. இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம், ஈமான் கொணடடோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.
உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.
விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
(நினைவு கூருங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; "இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?" (என்று, அதற்கு) "நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது" என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; "இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;" "நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!" என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.
முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்;. பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்;. மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்;. அவனே மரிக்கச் செய்கிறான்;. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.
எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை (க்குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்;. அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.
அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், "இது எப்படி வந்தது?" என்று கூறுகிறீர்கள். (நபியே!) நீர் கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,"
மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.
இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது, "வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்," (அப்போது) அவர்கள் சொன்னார்கள்; "நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்." அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்;. தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்;. அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி; "அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரனம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள்" (பார்ப்போம் என்று).
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்;. மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி; "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.
அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை. என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.
அவர்கள் எத்ததையோரென்றால், தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்; அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.
மக்களில் சிலர் அவர்களிடம்; "திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" என்று அவர்கள் கூறினார்கள்.
இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
"குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
"நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், "சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.
மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.
எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழ்படவேண்டும் என்று விருப்புகிறார்களோ, அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்;).
"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்;).
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;).
"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; "உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆனாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்;. எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்;. இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்" (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்;. இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.
(அது) மிகவும் அற்ப சுகம். பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.
ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்;. (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்;. மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்னையுடையதாகும்.
மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்;. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்;. இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்;. நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்;. ஆடையும் அளியுங்கள்;. இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.
தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்;. மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிரைவேற்றிய பின்னர்தான்;. உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்;. ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து. உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையம் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்;. உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்;. தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்;. இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்;. எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்;. அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்;. அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்;. அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு. உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, "நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்" என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்; உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்..
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;. தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்;. ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்;. ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்;. ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்;. அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால். கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்;. அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
அத்தகையோர் உலோபத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்;. அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்). எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)
இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால். இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்;. ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;. அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை). பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி "தயம்மும்" செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்). நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்;. (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்;. (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்;. (இன்னும் உம்மை நோக்கி, 'நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்;, இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!' என்று கூறி, 'ராயினா' என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்;. (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் "நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;" (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்;, எங்களை அன்போடு கவனியுங்கள், (உள்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;. ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;. அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்;. இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்;. எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்;. அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்;. சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்;. (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
மேலும் அவர்களிடம்; "அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்" என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.
அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து "நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை" என்று கூறுகின்றனர்.
அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) "நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்" என்று கட்டளையிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.
மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
(போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்;. உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால், "அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்" என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.
அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; "நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக. யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) "எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
"உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!" என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு "எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, "இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது. நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்."
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது" என்று கூறுகிறார்கள்;. ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, "இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது" என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்; "எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன. இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!"
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;. யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
(நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;. உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்;. அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்;. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்;. அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை. எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக. நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை. மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?
நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்;. எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்;. (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
ஆனால் அவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்). ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்;. அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்;. எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்;. ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்;. எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்;. இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப்பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல. உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை. இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்;. இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்;. அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள் தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்;. ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
(இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்;. ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) "நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?" என (மலக்குகள்) கேட்பார்கள்;. எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்;. சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.
அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்;. ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;. அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்;. ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்;. பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்;. நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
எவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்;. எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்; லை. இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். "உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்" என்றும்,
"இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்;. அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்;. (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்" என்றும் ஷைத்தான் கூறினான்;. எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்;. அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்;. மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்;. அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.
மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்;. அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?
(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்;. இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ, அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்டகிறார்கள்; அதற்கு நீர், "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்" என்று சொல்லும்;. தவிர, வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும், குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்;. ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது. இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்;. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்;. நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.
எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்."
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு 'நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு' என்று நன்மாராயங் கூறுவீராக!
இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
(முஃமின்களே!) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்' என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.
(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) "நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?" என்று கூறுகின்றனர். மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று; அவர்களுடன் சேர்ந்து) "உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?" என்று கூறுகின்றனர். எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்;. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை. இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளிதுக் கொண்டிருக்கிறார்கள்;. அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா?
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தலத்தில்தான் இருப்பார்கள்;. அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்;. மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, "நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்;. காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்;. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர். அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு "எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்" எனக் கூறினர். ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது. அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள். அதையும் நாம் மன்னித்தோம்;. இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.
அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், "எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன." (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்;. இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்;. இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்;. இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்;. அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்;. மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.
நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்;. அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.
நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்;. இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்;. இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்;. எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்;. அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள்.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது. தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹமத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்;. இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்; அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்;. ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்;. இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்;. அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்;. அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்;. உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு(உணவிற்காக)ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்;. மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்;. இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்;. பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்;. அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்; ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;, அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;. இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்;. எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;. உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, "நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்;. இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்;. மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்; "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்;. எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்."
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அன்றியும் எவர்கள் தங்களை, "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்;. ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்;. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்;. இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்;. மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். "மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருமடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்" என்று (நபியே!) நீர் கேளும்;. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவன் நாடியதைப் படைக்கிறான்;. இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், "நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே" என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார். எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார். இன்னும்; அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்;. அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்;. உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்" என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
(தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ; ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார்.
அதற்கு அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்.
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை நோக்கி;) "அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினர்.
அதற்கவர்கள், "மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்;. நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
"என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!" என்று மூஸா கூறினார்.
(அதற்கு அல்லாஹ்) "அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்;. ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்" என்று கூறினான்.
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்;. அவ்விருவரும் (ஒப்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (பின்னவர்) "நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்" என்று கூறினார். அதற்கு (முன்னவர்) "மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று கூறினார்.
அன்றியும், "நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்" (என்றும் கூறினார்).
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்;. அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),
(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று. ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவர்க்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்;. அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் "அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்;. அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்;. அவனுடைய பாதையில் போர் புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியோறுகிறவர்களாக இல்லை. அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
எவரேனும், தம் தீ; ச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்;. இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப் பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர். (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்;. அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும். அப்படி இவர்களை நீர் புறக்கணித்து விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது. அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுகிறார்கள்;. இவர்கள் முஃமின்களே அல்லர்.
நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;. அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்;. ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்; "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று. அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?" என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன. இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்;. அவன் அவர்களை நேசிப்பான்;. அவனை அவர்களும் நேசிப்பார்கள்;. அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்;. காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்;. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்;. நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்;. இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்;. இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;. அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
அல்லஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;. நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.
முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்;. இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
"வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை. நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
"அல்; லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் "நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!" என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்;. இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல் படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்ளைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.
இன்னும்; அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையேயாகும்.
தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்;. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
"வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்; ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்;. எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைக் கொலை செய்தும் வந்தார்கள்.
(இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்;. இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்;. எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகபும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
இவர்கள் அல்லாஹவின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
"அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்தத் தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று (நபியே!) நீர் கேளும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
"வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீ; ங்கள் பின்பற்றாதீர்கள்;. அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
(நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர். அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது. மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர். "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.
மேலும், "அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்ளை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்" (என்றும் அவர்கள் கூறுவர்).
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.
ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்;. (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது, உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்;. நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் அல்லாஹ்வுக்கு நள்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான். ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான். இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்;. உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;). முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான்.
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான். இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன். மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,
(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை. இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், "தீயதும், நல்லதும் சமமாகா". எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக.
ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும். மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.
உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.
பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.
"அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.
ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்;. அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லீம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்;. (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்;. இவ்விருவரும் "நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை. அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று "அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனாமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் "(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?" என்று கேட்பான். அதற்கு அவர்கள்; "அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை. நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்" என்று கூறுவார்கள்.
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
"என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்" என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், "நாங்கள் ஈமான் கொண்டோம், நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள்.
"மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?" என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், "நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.
மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன். ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்.
இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.
"நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்);
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்).
அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்;, இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்;, அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்;, இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது. அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.
(அவ்வாறு இருந்தும்,) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.
எனவே, சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்.
அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.
காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், "இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்.
(இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.
நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.
"பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
"வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்" என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) "எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்" என்று கூறுவீராக அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
"வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.
"நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று கூறுவீராக.
"அந்தாளில் எவரொருவர் அந்த வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக (அல்லாஹ்) அவர்மீது கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்" (என்று கூறுவீராக).
"(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரன ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
(நபியே!) "சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?" எனக் கேளும்; "அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) "இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக
0 comments: