தமிழ் தர்ஜுமா 4
உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
நபியே! உம்முடைய மனைவிகளிடம்; "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
"ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்" என்றும் கூறுவீராக!
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.
இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் "ஸலாமுன்" (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)
எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக!
அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே 'தலாக்' செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.
அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார் ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சமயாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.
(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.
அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; "அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது" என்று நீர் கூறுவீராக அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.
நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.
அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பாவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.
"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
"எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக" (என்பர்).
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.
எனவே (இவ்வமானிதத்திற்கு மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்; களையும்;, முனாஃபிக்கான பெண்களையும்;, முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியியல் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.
எனினும் நிராகரிப்பவர்கள்; "(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது" என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது) அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.
மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.
ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்; "நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது "பொய்யை இட்டுக் கட்டுகிறாரா அல்லது இவருக்கு பைத்தியமா?" (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்.
வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
"வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கிறேன்" (என்றும் சொன்னோம்.)
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன "உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்" (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).
ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?
இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பதைகளையு)ம் அமைத்தோம்; "அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறினோம்).
ஆனால், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!" என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.
எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.
"அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை.
அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் "உங்கள் இறைவன் என்ன கூறினான்" என்று கேட்பார்கள். "உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்" என்று கூறுவார்கள்.
"வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?" என்று (நபியே!) நீர் கேளும்; "அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்" என்றும் கூறும்.
"நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்" என்றும் கூறுவீராக.
"நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்" என்றும் கூறுவீராக.
"அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்" என்றும் சொல்லும்.
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
இன்னும, அவர்கள் கூறுகிறார்கள்; "உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?" என்று.
"(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
"இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்" என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள் இந்த அநியாயக் காரர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, "நீங்கள் இல்லாதிருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்" என்று கூறுவார்கள்.
பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், "உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்.
அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், "அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?
அன்றியும் அச்சமூட்டி எச்சிரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; "நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிரரிக்கின்றோம்" என்று கூறாமல் இருக்கவில்லை.
இன்னும்; "நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்" என்றும் கூறுகிறார்கள்.
"நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
அன்றியும், எவர்கள் நம்முடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் வேதனையில் கொண்டு வரப்படுவார்கள்.
"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறும்.
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் "இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்" என்று (அல்லாஹ்) கேட்பான்.
(இதற்கு மலக்குகள்;) "நீ மிகத் தூய்மையானவன்; நீயே எஙகள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர் (ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்" என்று கூறுவார்கள்.
"இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அறியாயம் செய்தார்களே அவர்களிடம்" நாம் கூறுவோம்.
நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் "இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.
மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூரட்டும்)
"நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்" என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை உங்களுக்கு கடினமான வேதனை வரவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை."
கூறுவீராக "நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்கியாக இருக்கின்றான்."
கூறுவீராக "என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்."
கூறுவீராக "சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை இனிச்செய்யப் போவதுமில்லை."
கூறுவீராக "நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு 'வஹீ' மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சமயாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்."
இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நிர் காண்பீராயின்; அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.
மேலும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்" என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?
ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.
மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.
அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.
எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாரிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா, ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீராக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.
இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அடைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
(அவ்வாறே) இருளம் ஒளியும் (சமமாகா).
(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசம் வேதத்துடனும் வந்திருந்தார்க்ள.
பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையா நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வி; ன அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.
அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைககள் பட்டா(லானவையா)க இருக்கும்.
"எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
"அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான தங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை" (என்றும் கூறுவார்கள்).
எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்; "எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) "சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை" (என்று கூறுவான்).
நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.
அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.
"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை" (என்று நபியே! நீர் கூறும்).
நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.
அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிராமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி) செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர் அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர் வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.
மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.
யாஸீன்.
ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நி; ச்சயமாக உண்மையாகிவிட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
(அதற்கு அம்மக்கள்;) "நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.
(இதற்கு அவர்கள்;) "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்" என்று கூறினர்.
"இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை" (என்றும் கூறினார்).
(அதற்கு அம்மக்கள்;) கூறினார்கள்; "நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்."
அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்; "உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); "என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்" என்று கூறினார்.
"உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்" (என்றும் அவர் கூறினார்).
"அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
"அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.
"(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
"உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்."
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) "நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக' என்று (அவரிடம்) கூறப்பட்டது. "என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்."
"என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்" (என்பதை).
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
"அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள்" என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.
அன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் வித்ததாகும்.
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),
"இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும்
அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புற்ககணிக்காமல் இருப்பதில்லை.
"அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், "அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்" என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; "நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?" என்று.
அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
மேலும், ஸூர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
"எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?" என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
ஒரே ஒரு பேரொளி தவிர (வேறொன்றும்) இருக்காது உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதம் அநியாயம் செய்யப்பட மாட்டாது இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்தவர்களாக இருப்பார்கள்.
அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்க அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
'ஸலாமுன்' என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
அன்றியும்; "குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்" (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
"ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்மான பகைவன்" என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
"என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
"அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
"இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.
"நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்" (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை அது அவருக்குத் தேவையானதும் அல்ல இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பபதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; "எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?" என்று.
"முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
"பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; "குன்" (ஆகிவிடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
(ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.
ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
"இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
"நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
"அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
"ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
(அவ்வேளை) "எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்று அவர்கள் கூறுவர்.
"நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!" (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)
"அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
"அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை) பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
"இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்" (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
"உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?" (என்று கேட்கப்படும்).
ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
(தம் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்.
("அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!" என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
"அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்."
"ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
"(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்."
ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.
"அல்லாஹ்வைத்தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.
ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களசை; சுற்றி கொண்டுவரும்.
(அது) மிக்க வெண்மையானது அருந்துவோருக்கு மதுரமானது.
அதில் கெடுதியும் இராது அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
"நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?" என்றும் கேட்டான்.
(அவ்வாறு கூறியவனை) "நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?" என்றும் கூறுவார்.
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
(அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
"என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
"(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?
"(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்று கூறுவார்.
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா?
நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள்.
இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.
அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
"ஸலாமுன் அலாநூஹ்" - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம்.
அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
"அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?"
"அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?" (என்று கேட்டார்.)
பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
"நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்" என்றும் கூறினார்.
எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார்.
"உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?" (என்றும் கேட்டார்.)
பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
அவர் கூறினார்! "நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?"
"உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்."
அவர்கள் கூறினார்கள்; "இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்."
(இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்."
"என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்).
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது
நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம்.
"திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
"நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்."
ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.
இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
"ஸலாமுன் அலா இப்ராஹீம்" (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திருந்து இரட்சித்தோம்.
மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
"ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன்" மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறொம்.
நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
அவர் தம் சமூகத்தவரிடம்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
"நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு 'பஃலு' (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
"அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடை முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்."
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
"ஸலாமுன் அலா இல்யாஸீன்" இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்) அடியார்களில் நின்றுமுள்ளவர்.
மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
இன்னும், நீங்கள் காலை வேலைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று.
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள். ஆகையால் அவர்களை ஒரு காலம்வரை சுகிக்; கச்செய்தோம்.
(நபியே!) அவர்களிடம் கேளும்; உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
"அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்."
"அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்" (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர் ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்;) "குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை."
"நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
"மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்."
(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்;
"முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
"அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்" என்று.
ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
(அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).
ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர்.
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.
அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர் "இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் காஃபிர்கள் கூறினர்.
"இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
"(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது" என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.
"வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்).
"நம்மில், இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?" (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர் அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
அல்லது, யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் - அவர்களிடம் இருக்கின்றனவா,
அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
ஆனால் இங்கிருக்கும் படையினரும் (முன் தலைமுறைகளில்) முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே ஆவார்கள்.
(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
(இவ்வாறு) 'ஸமூது'ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.
இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கவில்லை. அதில் தாமதமும் இராது.
"எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரே, எங்கள் (வேதனையின்) பாகத்தை துரிதப்படுத்தி(க் கொடுத்து) விடுவாயாக" என்றும் (ஏளனமாகக்) கூறுகின்றனர்.
இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவரகா இருந்தார்.
நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.
மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.
அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!"
(அவர்களில் ஒருவர் கூறினார்;) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்."
(அதற்கு தாவூது;) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே" என்று கூறினார்; இதற்குள்; "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
(நாம் அவரிடம் கூறினோம்;) "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், அனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.
மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.
அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது
"நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்" என அவர் கூறினார்.
"என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார் அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்."
இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.
"என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பொருங் கொடையாளியாவாய்" எனக் கூறினார்.
ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;
சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).
"இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக் கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).
மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், "நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்" (என்று கூறிய போது);
"உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்" (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) "இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன" (என்று சொன்னோம்).
பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவுட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.
"ஒரு பிடி புல் (கற்றையை) உம் கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்" (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).
நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.
'அத்னு' என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.
அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.
"கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
"நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
இது (நல்லோருக்காக) ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
(அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.
இது (தீயோர்களுக்காக) ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.
இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.
(நரகவாதிகளின் தலைவர்களிடம்;) "இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்ப்பவர்கள்" (என்று கூறப்படும்).
அதற்கு அவர்கள்; "அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!" என்று கூறுவர்.
"எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!" என்று அவர்கள் கூறுவர்.
இன்னும், அவர்கள்; "நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
"நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விடடனவா?" என்று கூறுவர்.
நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.
(நபியே!) நீர் கூறுவீராக "நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாளபவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.
"(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்."
(நபியே?) கூறுவீராக "(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.
"நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.
"மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
"நிச்சயமாக நாம் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை.
(நபியே! நினைவு கூர்வீராக!) "நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்;
"நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்" (எனக் கூறியதும்);
அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.
இப்லீஸைத் தவிர அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
"இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?" என்று (அல்லாஹ்) கேட்டான்.
"நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்" என்று (இப்லீஸ்) கூறினான்.
(அப்போது இறைவன்) "இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்" எனக் கூறினான்.
"இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்" (எனவும் இறைவன் கூறினான்).
"இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக" என்று அவன் கேட்டான்.
"நிச்சயமாக நீ அவகாசம் சொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே" என (அல்லாஹ்) கூறினான்.
"குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்" (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்.
அப்பொழுது "உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்" என்று (இப்லீஸ்) கூறினான்.
"(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர" (என்றான்).
(அதற்கு இறைவன்;) "அது உண்மை உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.
"நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்" (என்றான்)
(நபியே!) நீர் கூறும்; ("இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
"இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை."
"நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொளவீர்கள்."
(யாவரையும்) மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், "அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பிவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிடட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னப்பவன்.
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையெதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன். மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.
இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக் இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக "உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே."
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்; "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்."
(நபியே!) நீர் கூறும்; "ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்."
(நபியே! இன்னும்) "மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்" என்றும் கூறுவீராக.
"அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவராக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்றும் நீர் கூறுவீராக).
"என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்வேனாயின், மகத்தான ஒரு நாளின் வேதனைக்கு நான் நிச்சயமாக அஞ்சகிறேன்" என்று (நபியே!) நீர் கூறும்.
இன்னும் கூறுவீராக "என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்.
"ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." கூறுவீராக "தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க."
(மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; "என் அடியார்களே! என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்."
எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!
அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.
(நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா?
ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியியல் மாற மாட்டான்.
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெள; வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.
அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார் (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு "நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்" என்று கூறப்படும்.
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.
இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்).
அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்; ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
நிச்சயமாக நீரும் மரிப்பவர் நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.
பின்னர், கியாம நாளில் உங்களுடைய இறைவனிடத்தில் நிச்சயமாக நீங்கள் (கொண்டுவரப்பட்டு)வாது செய்வீர்கள்.
எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.
அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.
அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.
அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர் மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.
அன்றியும், எவரை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ, அவரை வழி கெடுப்பவர் எவருமில்லை; அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிதீர்ப்பவனாகவும் இல்லையா?
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; "அல்லாஹ் தான்!" என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக "அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" (நபியே!) மேலும் நீர் கூறுவீராக "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்."
"என்னுடைய சமூகத்தாரே! உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
"இழிவு படுத்தும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது?" (என்பதை அறிவீர்கள்).
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! "அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?" (என்று.)
"பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன் மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
"அல்லாஹ்iவே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.
அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்; "இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள்; ஆயினும் அவர்கள் சம்பாதித்து எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை விசாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? ஈமான் கொள்ளும் மக்கள் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன.
"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.
"அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே"! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;
அல்லது "அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களின் - ஒருவனாகி இருப்பேனே!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், "(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
(பதில் கூறப்படும்;) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்."
அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்.
வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.
"அறிவிலிகளே! நான் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்க வேண்டுமென்று என்னை நீங்கள் ஏவுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், "நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்" (என்பதுவேயாகும்).
ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்குரிய கூலியை முழுமையாகப் பெறுவான்; மேலும், அவன், அவர்கள் செய்தவற்றை நன்கறிந்தவன்.
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?" என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) "ஆம் (வந்தார்கள்)" என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது.
"நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்" (என்று அவர்களிடம் கூறப்படும்).
அதற்கு (சுவர்க்கவாசிகள்); "அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்" என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.
இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். "அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்" என்று (யாவராலும்) கூறப்படும்.
ஹா, மீம்.
(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்; "எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
"எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
"இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்" (என்றும் கூறுவர்).
நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்; "இன்னு நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே" என்று அவர்களிடம் கூறப்படும்.
அதற்கவர்கள்; "எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர்.
(பதில் கூறப்படும்;) "அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."
அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
அது (ஏனெனில்) நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
ஃபிர்அவ்ன், ஹாமான், ஃகாரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ "(இவர்) பொய்யுiரைப்பவர், சூனியக்காரர்" என்று கூறினர்.
ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்; "இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.
மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்; "மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று.
மூஸா கூறினார்; "கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்."
ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்; "என் இறைவன் அல்லாஹ்வே தான்!" என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்."
"என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?" என்றும் கூறினார்) அதற்கு "நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை" என ஃபிர்அவ்ன் கூறினான்.
நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்; "என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்."
"நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் 'ஆது', 'ஸமூது'டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
"என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
"அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது) அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
"மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) "அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்" என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.
"(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்" (என்றும் அவர் கூறினார்).
(இவ்வளவு உபதேசித்த பின்னரும்;) "ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!
"(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;" என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும் கூறினார்; "என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய பாதையைக் காண்பிக்கிறேன்.
"என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
"எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
"என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பினால் அழைக்கிறீர்கள்.
"நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
"என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
"எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்" (என்றும் அவர் கூறினார்).
ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் "ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்" (என்று கூறப்படும்).
அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி; "நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?" என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).
(அப்போது) "நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்" என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.
"இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள்.
"உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?" என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். "ஆம்! நிச்சயமாக" என அவர்கள் பதில் கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.
நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகழ் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு லஃனத்தும் (சாபமும்) உண்டு தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
(அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
குருடரும், பார்வையுடையோரும் சமமாகார் அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
(விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்ளவில்லை.
உங்கள் இறைவன் கூறுகிறான்; "என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்."
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திருப்பப்பட்டனர்.
அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
(நபியே!) கூறுவீராக "என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்."
அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்; 'ஆகுக!' என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.
அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்?
எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு
கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
பிறகு அவர்களுக்குச் சொல்லப் படும்; "(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?" என்று.
"அல்லாஹ்வையன்றி" (நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று கேட்கப்படும்); "அவை எங்களை விட்டும் மறைந்து விட்டன அன்றியும் முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர எதையும்) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!" என்று கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை அல்லாஹ் வழி கெடச் செய்கிறான்.
"இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
"நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்" (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர் (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.
அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும் அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்" என்று கூறினார்கள்.
ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.
ஹா, மீம்.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது
அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.
நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர் அவர்கள் செவியேற்பதும் இல்லை.
மேலும் அவர்கள் "நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும் நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்" என்று கூறினர்.
"நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்" என்று (நபியே!) நீர் கூறும்.
அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள் மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு."
"பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், "ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!.
"அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்" என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது "எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்" என்று சொன்னார்கள்.
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, "எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?" என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம் மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும் அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.
மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
அவர்கள் தம் தோல்களை நோக்கி, "எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?" என்று கேட்பார்கள் அதற்கு அவை "எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான் அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான் பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்" என்று கூறும்.
"உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுகு; கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம் ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள் அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாககிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.
"நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள. (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்" என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.
ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.
அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம் நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.
(அந்நாளில்) காஃபிர்கள் "எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)" எனக் கூறுவார்கள்.
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
"நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள் மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
"மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்" (இது என்று கூறுவார்கள்).
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து "நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?" (இருக்கின்றார்?)
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள் மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன் நன்கறிபவன்.
இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள் அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்) ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.
அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிபோனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.
நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?" என்று அவர்கள் கூறியிருப்பார்கள். "இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்" என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது இன்னும், அவர் (கண்)களில் குருட்டுதனமும் இருக்கிறது எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம் ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கினறனர்.
எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.
(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை (அவன் அறியாதது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை பிரசவிப்பதுமில்லை (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் "எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?" என்று அவர்களிடம் கேட்பான் அப்போது அவர்கள் "எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை" என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்" என்று கூறுவார்கள்.
அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் "இது எனக்கு உரியதே யாகும் அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்" என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம் மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சவைக்கச் செய்வோம்.
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
"(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும் தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று (நபியே!) நீர் கேளும்.
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
அறிந்து கொள்க நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள் அறிந்து கொள்க நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.
ஹா, மீம்.
ஐன், ஸீன், காஃப்.
(நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.
அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர் அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.
அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும் அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி பொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும்.
அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.
(நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே. உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்
வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே யன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டடிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பன், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது" என்றும் கூறுவீராக.
எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?
அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர் ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே (நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!" அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்; "அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்" என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியியல் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.
அவர்கள் நிராசையான பின்னர் மறையை இறக்கி வைப்பவன் அவனே மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் கால்நடைகள் (முதலியவற்றைப்) பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.
இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல்லது அவர்கள் சம்பாதித்த காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.
அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.
ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.
அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையே யாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.
ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
"இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?" என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவகாக்) கடைக்ககண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்; "எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்." அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
(அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.
அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்.
(அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.
ஹா, மீம்.
விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்;.
இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும்.
நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக, இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா?
அன்றியும், முன்னிருந்தார்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.
ஆனால் அவர்களிடம் வந்த நபி ஒவ்வொருவரையும் அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
எனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு) முன்னருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது.
(நபியே!) நீர் அவர்களிடம்; "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?" என்று கேட்டால், "யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
அவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான் -
அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக் அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து "இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்" என்று நீங்கள் கூறுவதற்காகவும்.
"மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்).
இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.
அல்லது, தான் படைத்ததிலிருந்து அவன் தனக்கென பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் மக்களை தேர்ந்தெடுத்து விட்டானா?
அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்).
அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
மேலும், "அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.
அல்லது, அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா?
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்; "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சவடுகளையே பின்பற்றுகிறோம்."
இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்; "நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சவடுகளையே பின்பற்றுகின்றோம்" என்று கூறாதிருக்கவில்லை.
(அப்பொழுது அத்தூதர்,) "உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள்; "நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்" என்று சொன்hர்கள்.
ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக!
அன்றியும், இப்றாஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி; "நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்" என்று கூறியதையும்;
"என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்" (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)!
இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்றாஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.
எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.
ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது "இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்" என்று அவர்கள் கூறினர்.
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?"
உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்களா? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையோ நாமே பங்கிட்டு இருக்கிறோம்." இவர்களில் சிலர், சிலரை ஊழயத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); "ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!" (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்" என்று கூறுவான்.
(அப்போது) "நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்" (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?
எனவே உம்மை நாம் (இவ்வுலகை விட்டும்) எடுத்துக் கொண்ட போதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்.
அல்லது நாம் அவர்களுக்கு (எச்சரித்து) வாக்களித்துள்ளதை (வேதனையை) நீர் காணும் படிச் செய்வோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்.
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.
நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை "அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா?" என்று நீர் கேட்பீராக.
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திடடமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி;) "நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று கூறினார்.
ஆனால், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றைக் கொண்டு (பரிகசித்துச்) சிரித்தனர்.
ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டி ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.
மேலும், அவர்கள்; "சூனியக்காரரேச (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யவும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்" என்று கூறினார்கள்.
எனினும், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டார்கள்.
மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்; "என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?
"அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா?
"(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா?"
(இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.
பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.
இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்.
இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.
மேலும்; "எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விடடும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது "மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்" என்று கூறினார்.
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செயதார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.
தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.
"என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்).
இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.
நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன் இன்னும், "நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!" (என அவர்களிடம் சொல்லப்படும்.)
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.
"உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்" (எனக் கூறப்படும்).
நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.
எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.
மேலும், அவர்கள் (நரகத்தில்) "யா மாலிக்" உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு அவர் "நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே" என்று கூறுவார்.
நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).
அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா? ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான்.
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்த கூடிப் பேசவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்களை (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!"
வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசத்தமானவன்.
ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்களை (வீண் விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில் கழிக்கவும் (நபியே!) நீர் விட்டு விடும்.
அன்றியும், அவனே வானத்தின் நாயனும் பூமியின் நாயனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆடசி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசவர்).
மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் "அல்லாஹ்" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
"என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்" என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து "ஸலாமுன்" என்று கூறிவிடும்; (உண்மைமை பின்னர்) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
ஹா, மீம்.
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; "இது நோவினை செய்யும் வேதனையாகும்."
"எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்" (எனக் கூறுவர்).
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.
நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
அவர் (கூறினார்;) "என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
அன்றியும், "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
அன்றியும், "என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
"மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள்" (என்று மூஸா கூறினார்).
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). "நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்" என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
"என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" (என்று இறைவன் கூறினான்.)
அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி" இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்) நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்;
"எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்."
"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்."
இவர்களும் மேலா? அல்லது 'துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
பாவிகளுக்குரிய உணவு
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
வெந்நீர் கொதிப்பதைப் போல்.
"அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
"பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
"நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
"நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்" (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும்.
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஹா, மீம்.
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.
(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது) மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.
இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்யாகும், எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.
கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.
அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.
ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்; அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.
எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்Nகு நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கடடளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
இதன் பின்னர் ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன்.
இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.
வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதறாகாக அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்; "நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; "காலம்" தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை" என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது - அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்" என்பது தவிர வேறில்லை.
"அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை" எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.
அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளைவந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள்.
"இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்" (என்று கூறப்படும்).
ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்லமல்கள் செய்து வந்தார்களோ, அவர்களை அவர்களுடைய இறைவன் தன் ரஹமத்தில் பிரவேசிக்கச் செய்வான்; அதுவே தெளிவான வெற்றியாகும்.
ஆனால், நிராகரித்தவர்களிடம்; "உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்" (என்று சொல்லப்படும்).
மேலும் "நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை" என்று கூறப்பட்ட போது; "(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்" என்று நீங்கள் கூறினீர்கள்.
அவர்கள் செய்த தீமையெல்லாம் (அந்நாளில்) அவர்களுக்கு வெளியாகும்; எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
இன்னும், "நீங்கள் உங்களுடைய இந்நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்றே, இன்றை தினம் நாம் உங்களை மறக்கிறோம்; அன்றியும் நீங்கள் தங்குமிடம் நரகம் தான்; மேலும், உங்களுக்கு உதவி செய்பவர் எவருமில்லை" என்று (அவர்களுக்குக்) கூறப்படும்.
நீங்கள் அல்லஹ்வின் வசனங்களை ஏளனமாக எடுத்துக் கொண்டதனாலும் இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி ஏமாற்றி விட்டதினாலுமே இந்த நிலை. இன்றைய தினத்தில் அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்; மன்னிப்பளிக்கப்படவும் மாட்டார்கள்.
ஆகவே வானங்களுக்கும் இறைவனான - பூமிக்கும் இறைவனான - அகிலத்தாருக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இன்னும், வானங்களிலும், பூமியிலுமுள்ள பெருமை அவனுக்கே உரியது மேலும், அவன் தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கோன்.
ஹா, மீம்.
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.
"நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், "இது தெளிவான சூனியமே!" என்றும் கூறுகிறார்கள்.
அல்லது, "இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக "நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் எங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்" என்று (நபியே! நீர் கூறும்).
"(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை" என்று (நபியே!) நீர் கூறும்.
"இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?" என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.
நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி; "இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்" என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது "இது பண்டைக்காலக் கட்டுக் கதை" எனக் கூறுவார்கள்.
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான்.
சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.
ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; "சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!" என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) "உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது" என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் "இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகிறான்.
இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், "உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், "ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.
அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார்.
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது
"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.
(அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியதையும், இட்டுக் கட்டியவையுமாகும்.
மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, "மெளனமாக இருங்கள்" என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
(ஜின்கள்) கூறினார்கள்; "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) 'வழி' காட்டுகின்றது.
"எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
"ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்."
வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) "இது உண்மையல்லவா?" (என்று கேட்கப்படும்;) அதற்வர்கள், "எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்" என்று கூறுவார்கள். "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்" என்று அவன் கூறுவான்.
"(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேணிடிதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?
எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவினிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடை நிலையையும் சீராக்குகின்றான்.
இது ஏனெனில்; நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள் - இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக் கூறி விள)க்குகிறான்.
(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.
மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான்.
ஏனெனில்; அல்லாஹ் இற்ககிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்.
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.
இது ஏனெனில்; அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.
நிச்சயமாக அல்லாஹ்; எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விடடு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.
எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக் காண்பிக்கப் பட்டுள்தோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்த, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து "அவர் சற்று முன் என்ன கூறினார்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.
எனவே இவர்கள் தங்கள் பால் திடுகூறாக (தீப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்.
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்; "(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?" என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதேதா அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.
(ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடுவும் முனைவீர்களோ?
இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.
இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், "நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்" என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.
ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,
இது ஏனெனில்; நிச்சயமாக இவர்கள் அல்லஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.
அல்லது எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா?
அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்களை செய்கைகளை நன்கறிகிறான்.
அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கன்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
நிச்சியமாக, எவர்களை நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.
திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அறிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.
அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி வடுவான்.
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்க்ள தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்)
அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்னோன்.
முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களின் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்) அவற்றின் கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான் வெற்றியாகும்.
அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்.
(ஆகவே, முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டு, அவனுக்கு (சன்மார்க்கத்தில்) உதவி, அவனைச் சங்கை செய்து, காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்).
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.
(நபியே! போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின்தங்கி விட்ட நாட்டுப் புறத்து அரபிகள்; "எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பங்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன எனவே, நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!" எனக் கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள்; "அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்" எனக் கூறும்.
"(நீங்கள் கூறுவது போல்) அல்ல (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடம்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்."
அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
மேலும் வானங்களிடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே! தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்; தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான் - அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கி விட்டவர்கள், "நாங்களும் உங்களைப் பின்பற்றிவர அனுமதி கொடுங்கள்" என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள்; "நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்" என்று (நபியே! அவர்களிடம்) நீர் சொல்லி விடுவீராக ஆனால், அவர்கள்; "அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்" எனக் கூறுவார்கள்; அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) அறிந்துணராமலே இருக்கிறார்கள்.
பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; "நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லஹ் உங்களுக்கு அழிகிய நற்கூலியைக் கொடுப்பான்; ஆனால் இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்" என்று (நபியே!) நீர் கூறும்.
(ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) அந்தகர் மீதும் குற்றம் இல்லை முடவர் மீதும் குற்றம் இல்லை நோயாளி மீதும் குற்றம் இல்லை - அன்றியும் எவர் அல்லாஹ்வுக்கும், அவருடைய தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் விரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.
இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).
மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்.
நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.
இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.
இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
"மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்து காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.
(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் - அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும் (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்,
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவெ தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.
முஃமினகளே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து போசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான் கூலியும் உண்டு.
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!
நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள்.
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
"நாங்களும் ஈமான் கொண்டோம்" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், "நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழிபட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. "ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.
"நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்" என்று (நபியே!) நீர் கூறும்.
அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
"நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
காஃப், கண்ணியமிக்க இக் குர்ஆன் மீது சத்தியமாக!
எனினும்; அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்; "இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்."
"நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது" (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.
இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அதை; துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.
அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்).
(அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ரஸ்ஸு (கிணற்று) வாசிகளும், ஸமூது மக்களும் (இவ்வாறு மறுமையை) மறுத்தார்கள்.
'ஆது' (சமூகத்தாரும்) ஃபிர்அவ்னும் லூத்தின் சகோதரர்களும் (மறுத்தனர்).
(அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.
எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது-
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்)
மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும்.
அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும்.
"நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது." (என்று கூறப்படும்).
அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) "இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது" என்று கூறுவார்.
"மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள்.
"(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.
ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்" (என்றுங் கூறப்படும்).
(அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; "எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-"
"என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்" என்று (அல்லாஹ்) கூறுவான்.
(எனவே என்னுடைய) அச்சொல் "என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்" (என்றும் அல்லாஹ் கூறுவான்).
நரகத்தை நோக்கி, "நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.
"இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது)."
எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
"ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும்" (என்று கூறப்படும்).
அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது.
அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாளிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலிரும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?
எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.
இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக.
மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் - அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது.
பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.
அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லபதேசம் செய்வீராக.
(புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
(நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
"உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.
இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். "இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே" என்று எண்ணிக் கொண்டார்).
எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார்.
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, "(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.
(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.
(பின்னர் இப்றாஹீம்;) "தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?" என்று வினவினார்.
"குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
"அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
"வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை."
ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம்.
மலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான்.
ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
இன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை அனுப்பியN போது
(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
மேலும் 'ஸமூது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); "ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது
அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும்
0 comments: