தமிழ் தர்ஜுமா 2



வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே" என்று கூறிவிடும்.
எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்.
அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.
அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, "நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே" என்று கேட்போம்.
"எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை" என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.
(நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.
அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.
நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், "எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்" எனக் கூறுவதைக் காண்பீர்.
எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
அன்றியும், "இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று "ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான்.
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர்; அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப்பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.
(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
(சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர்தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.
(நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை"
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்; "அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?" என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?
"அப்படியல்ல! - அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான், இன்னும் (அவனுடன்) இணை வைத்திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்.
(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் - அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; "எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்."
"அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக, (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீர்ராக (இவ்வாறு இருந்தும); பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
"திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும்.
(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
ஆனால் எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.
(நபியே!) நீர் கூறும்; "என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை." இன்னும் நீர் கூறும்; "குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?"
இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.
(நயியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.
நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?
நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
குற்றவாளிகளின் வழி (இன்னதென்று சந்தேகமின்றித்) தெளிவாகுவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
"நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்" (என்று நபியே!) நீர் கூறுவீராக "உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
பின்னும் நீர் கூறும்; "நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் எதற்கு அசவரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."
அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன்.
(நபியே!) நீர் கூறும்; நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) "எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?"
"இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே" என்று கூறுவீராக.
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, "நான் உங்கள் மீது பொருப்பாளன் அல்ல" என்று (நபியே!) நீர் கூறிவிடும்.
ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) சீக்கரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொருப்பாகும்.
(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
(நபியே!) நீர் கூறும்; "நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டியபின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் "எங்கள் இடம் வந்து விடு" என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்ததால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்." இன்னும் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்."
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் "ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
இப்றாஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், "விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்" என்று கூறியதை நினைத்துப்பாரும்.
அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்றாஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; "இதுதான் என் இறைவன்!" என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், "நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்" என்று சொன்னார்.
பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், "இதுவே என் இறைவன்" என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது "இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது" என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்" என்று கூறினார்.
"வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (என்று கூறினார்).
அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் "அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்று கூறினார்.
உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)
எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்றாஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சதோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.
இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.
இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக.
இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள், "அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்; "பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்." (நபியே! மேலும்) நீர் கூறுவீராக "அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)" பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, "எனக்கு வஹீ வந்தது" என்று கூறுபவன்; அல்லது "அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்" என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறுவதை நீர் காண்பீர்).
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), "நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்; நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுவார்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை, உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது, உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன" (என்று கூறுவான்).
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள் - அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்;;. அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம். பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெள; வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்;, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் 'நான் உங்களைக் காப்பவன் அல்ல' (என்று நபியே! நீர் கூறும்).
நீர் (பல வேதங்களிலிருந்து) காப்பி அடித்து இருக்கிறீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும் அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறே விளக்குகிறோம்.
(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை, இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்; அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?
மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.
நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.
இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்).
(நபியே! கூறும்;) "அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்.
மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.
நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.
அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
(முஃமின்களே!) "வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.
எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.
மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.
அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.
அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.
அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) "ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?" என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்; "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவனையை நாங்கள் அடைந்து விட்டோம்" என்று கூறுவார்கள்; அதற்கு அவன், "நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருடன் - அவர்கள் செய்து கொண்டிருக்கும் (பாவச்) செயல்களின் காரணத்தால் - நெருங்கியவர்களாக ஆக்குகிறோம்.
(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?" (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், "நாங்களே எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.
ஒவ்வொருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பராமுகமாக இல்லை.
உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்றே - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட(கியாமத்)து வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.
(நபியே!) நீர் கூறும்; "என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே, அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்."
அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை ஏற்படுத்தினார்கள்; இன்னும் அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணை தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள் - அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேர்வதில்லை அல்லாஹ்வுக்கு ஆகியிருப்பது அவர்கள் தெய்வங்களுக்குச் சேரும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் செய்யும் இம்முடிவு மிகவும் கெட்டதாகும்.
இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன. அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.
இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) "ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.
மேலும் அவர்கள், "இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன - அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றும் கூறுகிறார்கள்; அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் - நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அநிந்தவனுமாக இருக்கின்றான்.
எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெள; வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
(நபியே! அம்மக்களிடம்) "கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை, வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை, அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்பீராக.
இன்னும், "ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை, மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
(நபியே!) நீர் கூறும்; "தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை" - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.
நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.
(அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் "அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்" என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
"நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது, அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்" என்று நீர் கூறும்.
"நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
"வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நாம் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).
(மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்); ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி "(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்" என்று (நபியே!) நீர் கூறும்.
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
வர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்றாஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்வர்களில் ஒருவராக இருக்கவில்லை.
நீர் கூறும்; "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
"அவனுக்கு யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லீம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).
"அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்.
அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.
அலிஃப், லாம், மீம், ஸாத்.
(நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
(பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்; "நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.
ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.
நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், "ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)" என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
"இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை, ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்" என்று அல்லாஹ் கூறினான்.
"(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக" என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
(அதற்கு அல்லாஹ்) "நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்" என்று கூறினான்.
(அதற்கு இப்லீஸ்) "நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்" என்று கூறினான்.
"பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்" (என்றும் கூறினான்).
அதற்கு இறைவன், "நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான்.
(பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).
எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்.
"நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான்.
இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.
அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
(அதற்கு இறைவன், "இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" என்று கூறினான்.
"அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்" என்றும் கூறினான்.
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், "எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்" என்று சொல்கிறார்கள். "(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.
"என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்" என்று நீர் கூறும்.
ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
(நபியே!) நீர் கேட்பீராக "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்; "அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்" இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
"என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள், பாவங்கள்;, நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
ஒவ்வோரு கூட்டதாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
ஆனால் நம் வசனங்களை பொய்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்வளோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) "அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) "அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்" என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
(அல்லாஹ்) கூறுவான்; "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்." ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, "எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு" என்று சொல்வார்கள். அவன் கூறுவான்; "உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்."
அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, "எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்" என்று கூறுவார்கள்.
எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்" (இதற்கு பதிலாக, "பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்.
சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, "எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (பெற்றுக் கொண்டோம்" என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், "அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" என்று அறிவிப்பார்.
(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.
(நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)" என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே" என்று கூறுவார்கள்.
சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்; "நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!"
"அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்.
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்" எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; "நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்" என்று கூறுவார்கள்.
(ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
(மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான் அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
(ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), "என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், "மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்" என்று கூறினார்கள்.
அதற்கு (நூஹு) "என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்" என்று கூறினார்.
"நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்" (என்று கூறினார்).
உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா?
அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.
இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சதோரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?" என்று கேட்டார்.
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர்? "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்" என்று கூறினார்.
"நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்" (என்று கூறினார்).
"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்)
அதற்கு அவர்கள் " எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.
ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.
ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.
இன்னும் நினைவு கூறுங்கள்; 'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்" (என்றும கூறினார்).
அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்.
அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்; "நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.
பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் "என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, "உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை" என்று கூறினார்.
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"
"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
எனவே, நாம் அவரையும், அவருடைய மனைவியைத்தவிர, அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடை சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்" என்று கூறினார்.
"மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னுவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக" (என்றும் கூறினார்).
"உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" (என்றும் கூறினார்).
அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), "ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்" என்று கூறினார்கள் - அதற்கவர், "நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?" என்று கேட்டார்.
"உங்கள் மார்க்கத்தை விட்டு; அலலாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் தீரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்" (என்று கூறி), "எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்).
அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), "நீ; ங்கள் ஷுஐபை பின் பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்" என்று கூறினார்.
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.
ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராகவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், "என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்" என்று அவர் கூறினார்.
நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்; நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன" என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்ட வாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
(நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாரோரைப் பாவிகளாகவே கண்டோம்.
அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
"ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார்.
"அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை" (என்றும் அவர் கூறினார்).
அதற்கு அவன், "நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்" என்று கூறினான்.
அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், "இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!" என்று கூறினார்கள்.
(அதற்கு, ஃபிர்அவ்ன்), "இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?" (என்று கேட்டான்.)
அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டினங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
"அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்" என்று கூறினார்கள்.
அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், "நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?" என்; று கேட்டார்கள்.
அவன் கூறினான்; "ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்."
"மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர்.
அப்பொழுது நாம் "மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்" என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.
அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து
"அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;
"அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள்.
அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
"நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" என்ற கூறினான்.
அதற்கு அவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள்.
"எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து எந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.)
அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) "மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொண்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆகிக்கம் பெற்றுள்ளோம்" என்று கூறினான்.
மூஸா தம் சமூகத்தாரிடம்; "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்" என்று கூறினார்.
"நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்; "உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்."
பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், "அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்" என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்; அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
அவர்கள் மூஸாவிடம், "நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை" என்று கூறினார்கள்.
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் "மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்" என்று கூறினார்கள.
அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.
ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், "மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!" என்று வேண்டினர்; "நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்" என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
"நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே" (என்றும் கூறினார்).
"அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்" என்றும் அவர் கூறினார்.
இன்னும் நினைவு கூறுங்கள்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உஙகள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்hவறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழமை பெற்றது. அப்போது மூஸா தம் சதோதரர் ஹாரூனை நோக்கி, "நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!" என்று கூறினார்.
நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
அதற்கு அவன், "மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக" என்று கூறினான்.
மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி; "அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்" (என்று கூறினான்).
எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்; "எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) "பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்" இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்" என்று கூறினார்.
"என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்;. பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
மூஸாவை விட்டும் கோபம் தனிந்த போது, (அவர் எறிந்து விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், "என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்" என்று பிரார்த்தித்தார்.
"இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், "என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்" என்று கூறினான்.
எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."
உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.
ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து "நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்" (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவிலலை தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது
அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வெறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம்.
(அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்."
அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கின்றார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்;. இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). 'எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்' என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், "அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப் படவில்லையா?" (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, "நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்" (என்று கூறினோம்).
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
அல்லது, "இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?" என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.
(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.
நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்;. யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன் அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.
எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.
(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.
(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை."
அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்."
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று.
"நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.
நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.
எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
ஆனால் ஷைத்தான்களின் சதோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.
நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், "நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?" என்று கேட்பார்கள்; (நீர் கூறும்;) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.
குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களேர் அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துக்கொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.
"இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு" என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.
(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, "நாங்கள் செவியுற்றோம்" என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.
அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
"நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்காளாக!"
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள் நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.
"நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்னையுடையவன்.
அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், "நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று சொல்கிறார்கள்.
(இன்னும் நிராகரிப்போர்;) "அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!" என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).
ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
(இக்காரணங்கள்; இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது எனினும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்;) "நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்" (என்று).
நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)
(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகம்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.
(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்கிளிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இறந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்துக் கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, "இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!" என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, " மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்" என்று கூறினான்.
நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லீம்களைச் சுட்டிக்காட்டி) 'இவர்களை இவர்களுiடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது' என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக).
மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்; "எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்" என்று.
இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.
(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவாகளுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
"ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
(நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.
எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்ததையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலான-வையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக "உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும் எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்குப் புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும்தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்-அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மாhக்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே. ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணைவைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.
ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.
அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்."
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.
அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.
'குஃப்ரின்' மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கதாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.
அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்;) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள்.
பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக் குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும்.
அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள; ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில; சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு உன்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
"(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்" என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்கள்?
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.
(போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்குமங்கும்) உழலுகின்றனர்.
அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) "தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.
உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.
நிச்சயமாக இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பியிருக்கிறார்கள். உமது காரியங்களை புரட்டியும் இருக்கிறார்கள். முடிவில் சத்தியம் வந்தது. அவர்கள் வெறுக்கக் கூடியவர்களாக உள்ள நிலையில் அல்லாஹ்வுடைய காரியம் (மார்க்கம்) மேலோங்கியது.
"(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்" என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால், அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவர்கள் "நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம்" என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் (உம்மை விட்டுச்) சென்று விடுகிறார்கள்.
"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
(நபியே!) நீர் கூறுவீராக "(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?" ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் எள்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் விருப்புடனோ, அல்லது வெறுப்புடனோ (தர்மத்திற்குச்) செலவு செய்தாலும் அது உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - ஏனெனில் நிச்சயமாக நீங்கள் பாவம் செய்யும் கூட்டத்தாராகவே இருக்கின்றீர்கள்.
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை.
அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்கள் (பெருக்கமும்) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையிலேயே அவர்களை வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கிற நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும் நாடுகிறான்.
நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து சொல்கின்றனர்; அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்; என்றாலும் அவர்கள் பயந்த கூட்டத்தினர்தான்.
ஓர் ஒதுங்கும் இடத்தையோ, அல்லது குகைகளையோ, அல்லது ஒரு சுரங்கத்தையோ அவர்கள் காண்பார்களாயின் (உம்மை விட்டு) அதன் பக்கம் விரைந்து ஓடிவிடுவார்கள்.
(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால், அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள்.
அல்லாஹ்வும் அவனுடைய தூரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து, "அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்" என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்).
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
(இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத்துன்புறுத்துவோரும் அவர்களில் இருக்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "(நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; முஃமின்களையும் நம்புகிறார்; அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் கருணையுடையோராகவும் இருக்கின்றார்." எனவே எவர்கள் அல்லாஹ்வின் தூதரை துன்புறுத்துகிறார்களோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவிலலையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.
முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்; " நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்."
(இதைப்பற்றி) நீர் அவர்களைக் கேட்டால், அவர்கள், "நாங்கள் வெறுமனே விவாதித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும்தான் இருந்தோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். "அல்லாஹ்வையும், அவன் வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.
புகழ் கூற வேண்டாம், நீங்கள் ஈமான் கொண்டபின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள், நாம் உங்களில் ஒரு கூட்டத்தாரை மன்னித்தபோதிலும், மற்றொரு கூட்டத்தாரை அவர்கள் குற்றவாளிகளாகவே இருப்பதால் நாம் வேதனை செய்வோம்.
நயவஞ்சகர்களான ஆடவரும், நயவஞ்சகர்களான பெண்டிரும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாவங்களை தூண்டி, நன்மைகளை விட்டும் தடுப்பார்கள். (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்; அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான் - நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
நயவஞ்சர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் - அவர்களுக்கு நிரந்தராமான வேதனையுமுண்டு.
(முனாஃபிக்குகளே! உங்களுடைய நிலைமை) உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையை ஒத்திருக்கிறது அவர்கள் உங்களைவிட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள்; (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்; உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக்கிடந்தவாறே நீங்களும் மூழ்கி விட்டீர்கள்; இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன - அவர்கள்தான் நஷ்டவாளிகள்.
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்றாஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள், தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி.
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.
இவர்கள் நிச்சமயாக 'குஃப்ருடைய' சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.
(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.
அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா,
இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.
ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); "இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் "நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).
எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.
(நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் "நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்ந விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்தமெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்" என்று கூறுவீராக!.
அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்" என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்; "எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்" என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.
(போரில் கலந்துககொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
எனினும், (அல்லாஹ்வின்) தூரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள்; அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு - இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் எந்நாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.
கிராம வாசிகளில் சிலர் உம்மிடம் புகழ் சொல்லிக் கொண்டு, (போரில் கலந்து கொள்ளாமலிருக்கத்) தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கேட்க வந்தனர்; இன்னும் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் பொய்யுரைத்தவர்கள் (அனுமதி கேட்காமலே வீடுகளில்) உட்கார்ந்து கொண்டார்கள் - அவர்களில் நிராகரித்தவர்களை வெகு விரைவில் நோவினை செய்யும் வேதனை வந்தடையும்.
பலஹீனர்களும், நோயாளிகளும், (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்ய வசதியில்லாதவர்களும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உண்மையுடன் இருப்பார்களானால், (இத்தகைய) நல்லோர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; கிருபையுள்ளவன்.
போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் "உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே" என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.
குற்றம் பிடிக்கப்பட வேண்டியவர்கள் (யாரெனில், தாம்) செல்வந்தர்களாக இருந்தும், (போருக்குச் செல்லாதிருக்க) உம்மிடம் அனுமதிகோரி, பின் தங்கியிருப்பவர்களுடன் தாங்களும் இருந்துவிட விரும்பினார்களே அவர்கள் தாம்; அவர்களுடைய இருதயங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் - ஆகவே அவர்கள் (இதன் இழிவை) அறிய மாட்டார்கள்.
(முஃமின்களே! போரிலிருந்து வெற்றியோடு) நீங்கள் அவர்களிடம் திரும்பி போது, (போருக்கு வராமலிருந்தது பற்றி) உங்களிடம் வந்து புகழ் கூறுகின்றனர்; "புகழ் கூறாதீர்கள்; நிச்சயமாக நாங்கள் உங்களை நம்ப மாட்டோம்; நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்" என்று (நபியே!) நீர் கூறும்.
(போரிலிருந்து வெற்றியுடன்) அவர்களிடம் நீங்கள் திரும்பி வருங்கால், நீங்கள் அவர்களைக்(குற்றம் பிடிக்காது) புறக்கணித்து விட்டுவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்வார்கள்; ஆகவே நீங்களும் அவர்களைப் புறக்கணித்துவிட்டு விடுங்கள் - அவர்கள் நிச்சயமாக அசுத்தமானவர்கள்; அவர்களுக்குப் புகலிடம் நரகமே அதுவே அவர்கள் தீவினைக்குரிய (சரியான) கூலியாகும்.
அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடையும் பொருட்டு அவர்கள் உங்களிடம் இவ்வாறு சத்தியம் செய்கிறார்கள்; நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் மெய்யாக அல்லாஹ் பாவிகளான (இக்) கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.
காட்டரபிகள் குஃபிரிலும் (நிராகரிப்பிலும்) நயவஞ்சத்திலும் மிகவும் கொடியவர்கள்; அல்லாஹ் தன்னுடைய தூதர் மீது அருளியிருக்கும் வேதத்தின் வரம்புகளை அவர்கள் அறியாதிருக்கவே தகுதியானவர்கள். இன்னும் அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும்; ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்றார்கள் ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையம்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறை தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் ரஹ்மத்தில் (பேரருளில்) புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீNழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.
(நபியே! அவர்களிடம்;) "நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்" என்று கூறும்.
அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பர்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபன்னவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; "நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை" என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.
ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது ஆங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒருவடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.
(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.
இப்றாஹீம் (நபி) தம் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தம் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவேயன்றி வேறிலலை மெய்யாகவே, அவர் (தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்பது தெளிவாகியதும் அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார் - நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது (அவனே) உயிர் கொடுக்கிறான்; (அவனே) மரிக்கும்படியும் செய்கிறான் - அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.
நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.
(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள்.
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன - நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.
இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப்பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான்.
முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும், (வெறியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், "இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?" என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.
ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்" என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை (அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.
யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி' "உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?" என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக!
அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ; ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.
நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
அதில் அவர்கள்; "(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசத்தமானவன்" என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். "எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே" என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும் இருக்கும்.
நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைதக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்ககாதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
"(இதை நான் உஙக்ளுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நாம் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், "இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை" என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; "வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும்.
மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறுல்லை; பின்னர் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.
"மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள். அதற்கு "மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; "திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)" என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், "நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்கெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும்; உலக வாழ்க்கையில் சிறுது சகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேளு வகைகளாகின்றனர்; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்; (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.
(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி; "நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்" என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்" நீங்கள் எங்களை வணங்கவேயில்லை" என்று கூறிவிடும்.
"நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்" (என்றும் அவை கூறும்).
அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
"உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள்; "அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?" என்று நீர் கேட்பீராக.
உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்ள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக் அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக் அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.
ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!" என்று.
அப்படியல்ல் அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும். உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றானக அறிகிறான்.
உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?
உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.
அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
(உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு மன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
"நீங்கள் உண்மையாளராக இருந்தால் (அச்ச மூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)" என்று அவர்கள் கேட்கிறார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்."
(நபியே!) நீர் கூறுவீராக் "அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?
"அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது" (என்று தான் கூறப்படும்).
அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; "என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?" என்று கூறப்படும்.
மேலும் "அது உண்மை தானா?" என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; "ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது" என்று கூறுவீராக.
(அந்த நாளின்) வேதனையைக் காணும்போதுகள்ர்ர்கள்ற அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாரோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.
அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படவீர்கள்.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
"அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சிடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும்.
(நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?"
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை றாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், "குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறயதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவெ மகத்தான பொரும் வெற்றி ஆகம்.
(நபியே!) அவர்களுடைய (விரோதமான) வேச்ச உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லனையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
அறிந்து கொள்ளுங்கள் வானங்கிளல் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின் பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.
நீங்கள் அதில் சகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன் (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
"அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று (நபியே!) கூறிவிடும்.
உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவார்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சவைக்கச் செய்வோம்.
மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாதை நோக்கி, "என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம்செய்ய வேண்டாம்" என்று கூறினார்.
"ஆனால், நிங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்று கூறினார்0.
அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்; ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்hவறே நாம் முத்திரையிடுகிறோம்.
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, "நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்" என்று கூறினார்கள்.
அதற்கு மூஸர் "உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியோ நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்" என்று கூறினார்.
(அதற்கு) அவர்கள்; எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்" என்று கூறினார்கள்.
ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) "தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" எனக் கூறினான்.
அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், "நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்" என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸர் "நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்" என்று கூறினார்.
இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
மூஸா (தம் சமூகத்தவரிடம்); "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லீம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்" என்று கூறினார்.
(அதற்கு) அவர்கள்; "நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள்.
"(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!" (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்; "நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (ஃகிப்லாவாக) ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!" என்று வஹீ அறிவித்தோம்.
இன்னும்; "எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்" என்று மூஸா கூறினார்.
இறைவன் கூறினான்; "உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதுமு;) பின் பற்றாதீர்கள்" என்று.
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்" என்று கூறினான்.
"இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (என்று அவனிடம் கூறப்பட்டது).
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியனரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எத பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.
நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.
நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கெள; ள மாட்டார்கள்.).
தங்களுடைய ஈமான் பலனளிக்கு மாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்.
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
"வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்" என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக் எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக் மாட்டா.
தங்களுக்குமுன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள் (வேறு எதனiயும்) எதிர்பார்க்கின்றனரா? (அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அவ்வாறு வேதனை வருங்காலத்தில்) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவாகளையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்,
"மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடவீர்.
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
(நபியே!) நீர் கூறுவீராக் "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர்க தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்."
(நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.
அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.
நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். "நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்" (என்றும்).
"நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்;. ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்பகிறேன்" (என்றும்).
"அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டு வரவேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்" (என்றும் நபியே! நீர் கூறுவீராக).
"அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து ) மறைத்துக் கொள்வதற்காககத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்" (என்பதை அறிந்து கொள்வீர்களாக)!
இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
(குஃப்ரின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் "அதைத் தடுத்தது யாது?" என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள். அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து, பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், "என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன" என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.
ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, "அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?" என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும். நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.
அல்லது "இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்; "அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?" (என்று கூறவும்.)
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன் அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்தித்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.
அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் - இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இறந்து விட்டார்கள் - இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள்.
இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) யாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.
நிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை.
. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்; (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்."
"நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சகிறேன்" (என்று கூறினார்).
அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), "நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள்.
(அதற்கு) அவர் (மக்களை நோக்கி) "என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?" என்று கூறினார்.
"அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்,
"என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால், அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந் எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
"அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாரொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்" (என்றும் கூறினார்).
(அதற்கு) அவர்கள், "நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
(அதற்கு) அவர், "நிச்சயமாக அல்லாஹ் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்" என்று கூறினார்.
"நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (பாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்).
(நபியே! நீர் இதைக் கூறும் போது;) "இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்" என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்; "நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவென்."
மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது; "(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்ர்க.
"நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்."
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்; "நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்று கூறினார்.
"அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்).
இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி ந்ன்ற தம் மகனை நோக்கி "என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!" என்று நூஹ் அழைத்தார்.
அதற்கு அவன்; "என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்" எனக் கூறினான். இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டiளியிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகவி விட்டான்.
பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
நூஹ் தன் இறைவனிடம் "என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்" எனக் கூறினார்.
அ(தற்கு இறை)வன் கூறினான்; "நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்."
"என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
"நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக் இன்னும் சிலமக்களுக்கு நாம் சகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்" என்று கூறப்பட்டது.
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
"என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)
"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).
(அதற்கு) அவர்கள்; "ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்" என்று (பதில்) கூறினார்.
"எங்களுடைய தெய்வங்களில் சிலகேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை" (என்றும் கூறினார்கள்; அதற்கு) அவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்" என்று கூறினார்.
"(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்" (என்றும் கூறினார்).
நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழிpயலிருக்கின்றான்.
"நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எனற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).
நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹூதையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் - இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம்.
(நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.
எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக 'ஆது' கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான 'ஆது' கூட்டத்தாருக்கு கேடுதான்.
இன்னும், ஸமுது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்."
அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
"என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள்" என்று கூறினார்.
"அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்).
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்); "நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,
(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! 'ஸமூது' (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) 'ஸலாம்' (சொன்னார்கள்; இப்றாஹீமும் "ஸலாம்" (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) "பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாஃக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.
அதற்கு அவர் கூறினார்; "ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!"
(அதற்கு) அவர்கள், "அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.
(இது கேட்டு) இப்றாஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
நிச்சயமாக இப்றாஹீமை சகிப்புத் தன்மை உடையவராகவும், (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.
"இப்றாஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.
நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் "இது நெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார்.
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.
(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர் "உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே" என்று (விசனத்துடன்) கூறினார்.
(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்; "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"
எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.
அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன் (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்; "என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நிங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலையையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
"(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.
"நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்" என்று கூறினார்.
(அதற்கு) அவர்கள் "ஷுஐபெ! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்" என்று (ஏளனாமாக) கூறினார்கள்.
(அதற்கு) அவர் கூறினார்; "(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவேகர்க யார்,) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.
"என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
"ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்" (என்று கூறினார்).
(அதற்கு) அவர்கள் "ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லாலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்" என்று கூறினார்கள்.
(அதற்கு) அவர் கூறினார்; "(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.
"என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கோண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன் இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" (என்றும் கூறினார்).
(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்தலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்; ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!
நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.
(அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.
அவன் (-ஃபிர்அவ்ன்) மறுமை றானில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது.
இ(வ்வுலகத்)திலும், கியாம நாளிலும் அவர்கள் சாபத்தால் பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்கு கிடைக்கும் (இந்த) சன்மானம் மிகவும் கெட்டது.
(நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊhகளில் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன் சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.
அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை.
அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.
நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.
குறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை.
அந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களிர் தூபாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கி சாலிகளும் இருப்பர்.
தூபாப்பிய சாலிகள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும்.
உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
நற்பாக்கிய சாலிகளோ சவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
(நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களுக்கும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம்.
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட் வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.
நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக் வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்.
இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேரறவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.
பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.
(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்லச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.
(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கப்படமாட்டான்.
உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர் இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; "நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்" என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.
(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக் "நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்."
நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நாங்களும் (அவ்வாறே) எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்."
வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பாரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
நீங்கள் விளக்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆன் நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
யூஸுஃப் தம் தந்தையாரிடம்; "என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்" என்று கூறியபொழுது.
"என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன்மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்."
நிச்சயமாக யுஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்; "யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
யூஸுஃபை' கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள் (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்" என்றும் கூறியபொழுது,
அவர்களில் ஒருவர்; "நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார்.
(பிறகு தம் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
"நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்று கூறினார்கள்.
(அதற்கு யஃகூப்,) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.
(அதற்கு) அவர்கள், "நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்" என்று கூறினார்கள்.
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, "நீர் அவர்களின் இச்செயலைப்ற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.
"எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!" என்று கூறினார்கள்.
(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்;

0 comments: